தமிழ்க் கட்சியுடன் மட்டும் இணைந்து ஆட்சி அமைப்போம்! காரைதீவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயலாளர் குருபரன் தெரிவிப்பு

 





இலங்கை  நாட்டில் இருக்கும் தற்போதைய அரசியலமைப்பை மாற்றாவிட்டால் தமிழருக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஒற்றையாட்சி மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் குருபரன் காரைதீவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு  
சார்பில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் காரைதீவு பொது நூலக கேட்போர் மண்டபத்தில்   நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு  அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஹென்றி மகேந்திரன் மற்றும் இணைப்பாளர் சி.புண்ணியநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அங்கு குருபரன் மேலும் பேசுகையில்..

வடக்கு கிழக்கில் எந்த சபையில் என்றாலும்  ஆட்சி அமைக்கின்ற போது நாங்கள் தமிழ் கட்சியுடன் மாத்திரமே இணைந்து ஆட்சி அமைப்போம். வேறு சிங்கள முஸ்லிம் பேரினவாத கட்சியுடன் சேர்ந்து ஒருபோதும் ஆட்சி அமைக்க உடன்பட மாட்டோம்.

தென்னிலங்கை மக்கள் எதிர்பார்த்த மாற்றம் அங்கு நடந்தது. ஆனால் வடகிழக்கு மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் நடைபெறவில்லை. அதுதான் அரசியலமைப்பு மாற்றம் .எனவே தேசிய மக்கள் சக்தி விரைவாக அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். உங்களை நம்பி வடகிழக்கு மக்கள் கடந்த இரண்டு தேர்தலிலே வாக்களித்து இருக்கின்றார்கள் .
ஒரு வழியில் எமது தமிழின தலைவர்கள் மீது அல்லது அவர்களின் செயற்பாட்டின் மீது கொண்ட வெறுப்பும் ஆத்திரமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 எனவே தமிழ் தேசிய பரப்பில் இருக்கக் கூடிய தமிழ் தலைவர்கள் ஒற்றுமை எனும் வலுவான கயிற்றை இறுக பற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இன்னமும் நிலைமை மோசமாகும் .

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து பல மாதங்களாகின்றது. ஆனால் தமிழினத்தைப் பொறுத்தவரையிலே அங்கு எந்த விதமான ஆரோக்கியமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை கூறித்தான் ஆக வேண்டும்.
 அண்மையில் டில்வின் சில்வா கூறினார் நாங்கள் ஆயுதத்தை விரும்பி தூக்கவில்லை ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என்று .

இதே நிலைமைதான் தமிழ் மக்களுக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் ஏற்பட்டது .

எனவே அவற்றை மறந்து புதிய சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் அனைவரையும் இணைத்து செல்ல வேண்டியது அரசின் கடமையாக இருக்கின்றது .

தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகளிலே ஜனநாயகம் அதிகாரப் பகிர்வு கருத்துக்களை ஏற்கும் தன்மை கூடுதலாக இருப்பது எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே உள்ளது .
அதன்காரணமாக நீங்கள் தாராளமாக வாக்களிக்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக திருக்கோவில் பிரதேச சபையில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது கவலைதான் .அதனை நாங்கள் பொறுப்பேற்கின்றோம்.

இருந்த பொழுதிலும் ஏனைய பிரதேசங்களில் நாங்கள் கணிசமான அளவு வெற்றிபெற இருக்கின்றோம்.
எதிர்காலத்தில் நாங்கள் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பை மீண்டும்  வலுவான கட்சியாக உருவாக்க வேண்டும்.என்றார்.
 

( வி.ரி.சகாதேவராஜா)