"ஈழத்து பழநி" வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம், சந்தனமடு ஆற்றில் சித்தாண்டி பக்தர்கள் பாதயாத்திரை .

 





















"ஈழத்து பழநி"என அழைக்கப்படும் கிழக்கின்  சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின்
வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (5)  சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .

ஆலய பரிபாலன சபைத் தலைவர் முருக பக்தர் சுப்பிரமணியம் தியாகராஜா ( இ.அதிபர்) தலைமையில்  மகோற்சவகால குரு சிவஸ்ரீ சுபா பாஸ்கர குருக்கள் கிரியைகளை ஆரம்பித்து வைத்தார்.
 
ராமகிருஷ்ண மிஷன் மட்டு. மாநில உபதலைவர் ஸ்ரீமத் உமாதீஷானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 கொடியேற்றத் திருவிழாவுக்காக சித்தாண்டி மக்கள் சித்தாண்டிலியிருந்து 14 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வேலோடுமலையை வந்தடைந்தனர்.
நடுவில் சந்தனமடு ஆற்றைக் கடந்து அவர்கள் சென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

எதிர்வரும் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் அலங்கார உற்சவம் நிறைவடைய இருக்கிறது என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சு.தியாகராஜா தெரிவித்தார்.

வரலாறு:

 3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்தகாலத்தில் "வேலோடும் மலை" முருகன் ஆலயம் என்ற ஸ்தாபனம் தோற்றம் பெற்றது.

இது இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டியில் இருந்து 7கிலோமீற்றர் பயணித்து சந்தனமடு ஆற்றை கடந்து வனத்துக்குள் 7 கிலோமீட்டர்  பயணித்தால் அடையலாம்.
 அங்கு சித்தர்கள் ரிஷிகள் நமக்காக விட்டு சென்ற எச்சங்கள் இன்னும் இருக்கின்றன.

இன்றும் மிக சக்தி வாய்ந்த தேவ நாகங்கள் இங்குள்ள சித்தர்களின் பொக்கிஷங்களை பாதுகாக்கின்றன. நேராக நாகங்களின் தரிசனங்களை, தெய்வீக வாடைகளை உணரலாம். இங்கிருந்து நாக லோகத்துக்கு செல்லும் பாதை உள்ளது என்ற கல்வெட்டு இங்குள்ளது.


( வி.ரி.சகாதேவராஜா)