பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம் .

 


இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ வெளியிடுள்ள அறிக்கையில்,

 கடந்த 11 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் அளிக்கப்பட்ட மீனவர் நலனுக்கன தனி அமைச்சகம், மீன்பிடித் தொழிலை, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி, இந்திய நாட்டில் வாழும் பாரம்பரிய மீனவச் சமுதாயத்தை பழங்குடியினராக அங்கீகத்தல், புயல், பெருமழை, சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின்போது விவசாயிகளின் வங்கி கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்யும்போது மீனவர்களின் தொழில் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

ஏப்ரல் 4 அன்று இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்யவும், கைப்பற்றப்பட்ட மீனவர்கள் படகுகளை நிபந்தனையின்றி விடுவிக்கவும், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை நடத்திடவும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியும், மத்திய அரசும் நிறைவேற்றி தராதபட்சத்தில், புதிய பாம்பன் பாலத்தை திறப்பதற்காக ராமேஸ்வரத்துக்கு ஏப்ரல் 6 ஆம் திகதி வருகை தரும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பாக, மீனவர்களை திரட்டி கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.