மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சித்தபோதே இந்த சூடான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, சிறைச்சாலையின் வௌியில் பாதுகாப்பிற்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
சிறைச்சாலை வட்டாரங்களின் தகவலின் படி, சக கைதிகளை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகள் குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அமைதியின்மை தொடங்கியது. ஒரு வார்டைச் சேர்ந்த கைதிகள் வெளியேறி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளவும், வேறு சில கைதிகளுடன் மோதவும் தொடங்கியதால் நிலைமை மேலும் மோசமடைய தொடங்கியது.
இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.