மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது துண்டிக்கப்பட்ட மின்சாரத்தினை மீள புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சாரசபை ஊழியர்களின் அசமந்தம் காரணமாக ஒரு உயிர் பலியாகியுள்ள துயரச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது
இவ் விபத்தில் காரில் பயணித்த சாரதி காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தினை மீள வழமைநிலைக்கு கொண்டுவருவதற்காக மின்சாரசபை ஊழியர்கள் அப்பகுதியில் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு-கல்முனை வீதியில் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மின்சார கம்பியில் கழுத்துப்பகுதி சிக்குண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மகன் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பொலிஸாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை சென்றல்கேம்ப் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை முகமட் றிஸ்வான் என்பவரே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து சென்றல்கேம்புக்கு சென்றவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.