பேச்சித்தாயாரின் கடாட்சமும், நூற்றாண்டை காணும் மி.விபுலானந்தரின் கல்லடி பிரதேச வருகையும், ராமகிருஸ்ண மிசன்,சிவானந்தா வித்தியாலயத்தின் ஆரம்பமும்.

                                                                            


 






                                                                     

                                                                           







                                            




10.04.2025 கல்லடி பிரதேத்தின் வரலாற்று முக்கிய அடையாள தினமாகும். நூற்றாண்டுகளை தொட்டு நிற்கும் இத் தினத்தின் முக்கியத்துவத்தை மணித்துளிகளாக தருகின்றோம்.
தை 1925- பேச்சித்தாயாரின் அருட்கடாட்சத்துடன் ஆலய தர்மகர்த்தா ;   K.O வேலுப்பிள்ளை அவர்கள் ஆங்கிலப் பாடசாலை ஸ்தாபிப்பு பற்றிய அவசியத்தையும் எண்ணத்தையும் ஆலய பஞ்சாயத்து சபையிடம் வெளிப்படுத்தி, இது விடயமாக சுவாமி.விபுலாநந்தரை சந்திக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் தெரிவித்தார்.
பங்குனி 1925- ஆலய தர்மகர்த்தா அவர்களின் தலைமையில் சுவாமியை சந்தித்து ஆண்கள் ஆங்கில பாடசாலை ஸ்தாபிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தி கல்லடி பிரதேசத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்கள்.
10.04.1925- கல்லடி படகு துறையிலிருந்து ஆலய தர்மகர்த்தா தலைமையில் சுவாமிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு பேச்சித்தாயார் ஆட்சி செய்யும் பின்புறம் மைதானத்தில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
# ஆலய தர்மகர்த்தா ஆண்கள் ஆங்கில பாடசாலை ஸ்தாபிப்பு பற்றிய அவசியத்தை சுவாமியிடம் முன் வைத்தார்.
# இதனை செவி மடுத்த சுவாமி.விபுலானந்தர் இப் பணியை முன்னெடுப்பதற்கு நிதி,விசாலமான நிலம்,கட்டிட வசதி,ஆசிரியர் வளங்கள் இன்றியமையாதது.  இவற்றை பெறுவதற்கு இப் பிரதேசம் ஒழுங்குகளை செய்து பாடசாலையை ஸ்தாபித்து ஒப்படைக்கும் பட்சத்தில் இப் பணியை தொடர முடியும் என்ற கருத்தை தெரிவித்தார்.
# அவ்வேளை ஆலய தர்மகர்த்தா ;   K.O வேலுப்பிள்ளை அவர்கள் தமக்கு சொந்தமான விசாலமான நிலத்தை வழங்குவதாகவும்,பாடசாலை ஆரம்ப கட்டிடத்தை கட்டி வழங்கும் பொறுப்பையும் தான் ஏற்பதாகவும் தெரிவித்த அதே வேளை ,உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 1912ஆம் ஆண்டு சைவப்பள்ளி(தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரி) அபிவிருத்திக்காக கதிர்காமத்தம்பி உடையார்,சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால் வைப்பிலிடப்பட்டுள்ள 5000 ரூபாய்களையும் தருவதாகவும் கூறியதுடன்,பிரதேச மக்களும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என்ற உறுதி மொழியையும் வழங்கினார்.இதை தொடர்ந்து கல்லடி பிரதேசத்தில் கல்வி பணியை தொடர சுவாமி.விபுலானந்தர் அவர்கள் பூரணமான தனது சம்மதத்தை தெரிவித்தார்.
26.11.1925- சிவாநந்த வித்தியாலய அத்திவாரத்துக்கான பிரதான கற்கள் ஸ்ரீ சித்தி விநாயகர்,ஸ்ரீ பேச்சியம்மன் கடாட்சத்துடன் ஆலய வளாகத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு , சுவாமி.விபுலாநந்தர் அவர்களின் திருக்கரத்தால் அடிக்கல் நடப்பட்டது.
25.04.1928- K.O வேலுப்பிள்ளை அவர்கள் பின்வரும் ஆதனங்களை இராமகிருஷ்ண மிசனுக்கு சுவாமி.விபுலானந்தர் மூலம் வழங்கினார்.
# சிவாநந்த வித்தியாலய ஆரம்ப கட்டிடமும் அது சார்ந்த 1ஏக்கர்-19 பேர்ச் நிலமும்( K.O.V.க்குரியது)
#தற்போது விளையாட்டு மைதானம்,விடுதிகள் அமைந்துள்ள 9 ஏக்கர்-138 பேர்ச் நிலம்(K.O.V க்குரியது)
#தற்போது சிவபுரி,சுவாமி.விபுலானந்தர் சமாதி,சுவாமி.விபுலானந்தர் மணி மண்டபம்,பாலர் பாடசாலை  என்பன அமைந்துள்ள  4 ஏக்கர்- 65 பேர்ச் நிலம்(K.O.V,நொத்தாரிசு நல்லதம்பி ஆகியோருக்கு சொந்தமான பிரிபடா நில ஆதனம்.)
# சைவப்பள்ளிக்கூட அபிவிருத்திக்காக(தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரி) கதிர்காமத்தம்பி உடையார்,சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால் வைப்பிலிடப்பட்டிருந்த 5000 ரூபாய்கள்.
# சைவப்பள்ளிக்கூட கட்டிடமும் நிலமும்-77 பேர்ச் (38.5 பேர்ச்கதிர்காமத்தம்பி உடையாருக்குரியது)
(38.5 பேர்ச் சபாபதிப்பிள்ளை உடையாருக்குரியது)
15.04.1929- சமய அனுஸ்டானப்படி சுவாமி.அவர்களால் சிவானந்தா வித்தியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
22.04.1929- அதனை தொடர்ந்து மாகாண அரசாங்க அதிபர் ஹரிஷன் ஜோன்ஷன் அவர்களால் அதிகார பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது
01.05.1929- சிவானந்தா வித்தியாலயத்தின் கல்விப் பணி முறையான வகுப்புக்களுடன் சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
26.11.1929- கல்லடி உப்போடையில் இராமகிருஷ்ண மிசன் செயற்பாடுகளை சிவாநந்தா வித்தியாலய ஆரம்ப கட்டிடத்தில்,வண்ணார்பண்ணையிலிருந்து இல்ல மாணவர்களை இட மாற்றம் செய்து மிசன் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றார்.தனது ஓலைக்குடிசைக்கு எதிரில் தனது தெய்வக் குழந்தை பரமஹம்சரை பேச்சி அன்னை சுவாமி மூலம் அரவணைத்து கொண்டாள்.
# இட வசதியை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள்,மாணவர்கள் தங்கி இருப்பதற்காக     K O V.  அவர்களின் ராஜ்மகால் இல்லத்தில்  சுவாமி அவர்களால்   சிவானந்தா   மாணவர் விடுதி ஆரம்பிக்கப்பட்டது .
01.04.1931- சிவாநந்த வித்தியாலயம் அரச அங்கீகாரம் பெற்ற ஸ்ரீ இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயமாக மாற்றப்பட்டது.வித்தியாலயத்தை நிர்வகித்த பிரதேச மக்கள் சார்ந்த சபை நிர்வாகத்தை சுவாமி அவர்கள் மூலம் இராமகிருஷ்ண மிசனிடம் முழுமையாக ஒப்படைத்தனர்.
#1931 காலப்பகுதியில் இந்தியா செல்வதற்கு முன்பாக ஊர் பிரமுகர்களை சந்தித்து கல்லடி பிரதேசத்தில் கிடைத்த ஒத்துழைப்பும்,அன்பும்,ஆதரவும் மறக்க முடியாதது என்றும்,இப் பிரதேச மக்களுடன் இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உணர்வு பூர்வமாக தெரிவித்தார்.
# இதன் காரணமாக சுவாமியின் உடலை ஆலய தர்மகர்த்தா தலைமையிலான குழுவினர் மிசன் தலைமயுடன் உரையாடி கல்லடி பிரதேசத்தில் சமாதி வைத்தனர்.
#தூர நோக்கு சிந்தனையுடன் பாரம்பரிய முறைகளை தவிர்த்து இவர்கள் செய்த துணிச்சலான செயற்பாடு முத்தமிழ் வித்தகரை தினமும் அவ் வழியால் செல்லும் போது மனதால் வணங்கி செல்ல முடிகின்றது.
# ஆன்மிக புரட்சி மூலம் இராமகிருஸ்ண மிசனை வேரூன்ற செய்து பண்பட்ட  மிஷன் துறவிகளின் ஆசிர்வாதமும்,ஒத்தாசையும் பெற்று நாம் நல் வழிவாழ வழி செய்ததுடன்,நலிந்த நிலையிலுள்ள மக்களின் வாழ்வு சிறக்க மிசன் துறவிகளின் அர்ப்பணிப்புள்ள சேவைகள் சான்று பகிர்ந்து நிற்கின்றது
# சுவாமியின் கல்வி புரட்சி மூலம் இளமானிகளாக,முதுதத்துவமானிகளாக,கலாநிதிகளாக,பேராசிரியர்களாக பல் வேறு தொழில் வாய்ப்புகளைப்பெற்று சமுகம் நிமிர்ந்து நிற்பதை காண்கின்றோம்.
# சுவாமியின் கல்லடி பிரதேச வருகை நூறு வருடங்களை எட்டி நிற்கும் இத் தருணத்தில் அவரை அழைத்து வந்து அவருக்கு ஒத்துழைப்பை நல்கிய அனைவரும் நினைவு கொள்ளப்படவேண்டியவர்கள்.
# சுவாமி அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆன்மிக,கல்வி,கலாசார மறு மலர்ச்சி சரித்திரத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.
 

பிரபா பாரதி.