
கல்லாறு மற்றும் சமகிபுர ஆகிய பகுதிகளில் நேற்று இரவு காட்டு யானைகள் கிராமங்களில் உட்புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
யானைகளின் நடமாட்டம் பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவதுடன் பயிச்செய்கைகள் பெரிதும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிர்கள் அழிவடைந்துள்ளதுடன் அறுவடை இயந்திரத்தையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், கடந்த அரசாங்க காலத்தில் அமைக்கப்பட்ட யானை வேலிகள் தற்போது செயலிழந்த நிலையில் உள்ளதால், யானைகள் எளிதாக கிராமங்களுக்குள் நுழைவது அச்சுறுத்தலாக காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்காக, யானை வேலிகளை புதுப்பித்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தினை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.